மலையகத் தமிழர் எனும் தேசிய இன அடையாளப் பயணம் | மலையகம் 200 | எஸ். இஸட். ஜெயசிங்
Description
மலையக மக்கள் தங்களின் வாழ் நாள் முழுவதும் உழைக்கும் வர்க்கமாக மட்டுமே வாழ்ந்து வந்துள்ளனர். எந்த ஒரு வசதி வாழ்க்கையையும் இவர்கள் பெற்றதில்லை. கடந்த 200 வருட வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் முதலாளி வர்க்கத்தினரால் அடிமைகளாக உரிமை இல்லாதவர்களாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் கடந்த 200 வருட வரலாற்றில் பெற்றதை விட இழந்தவைகளே அதிகம். இப்போது இவர்கள் இவ் வலிகளில் இருந்து விடுபட வேண்டும் என விரும்புகிறார்கள். அதன் ஒரு அங்கமாக தாங்கள் மலையகத் தேசிய இனம் என்பதை நிலை நிறுத்தத் தொடங்கி விட்டார்கள். முஸ்லிம் மக்களும் இலங்கைத் தமிழரும் ஒரு தேசிய இனமாகக் கருதப்படும் போது நாங்களும் ஒரு தேசிய இனமாக ஏன் கருதப்படக் கூடாது என்ற முழக்கம் மலையகம் எங்கும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
மலையகத் தமிழர் என்ற தேசிய இன அங்கீகாரம் என்பது தனி நாட்டிற்கான கோரிக்கை அல்ல என்பதை அரசும் ஏனைய சமூகங்களும் குறிப்பாக பெரும்பான்மைச் சிங்கள சமூகமும், ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் போராட்டமானது வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கானதேயன்றி, நாட்டை துண்டாடுவதற்கானதல்ல.
தங்களை உலக அரங்கிலும் இலங்கையின் அரசியல் செயற்பாட்டிலும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களுக்கான அடையாளத்தை ஆழமாகப் பதிய விரும்புகிறார்கள். இது இவர்களின் திடீர் கோரிக்கை அல்ல. 1967 ஆம் ஆண்டுக்கு முன்பே மலையகம் என்ற முத்திரை அழுத்தமாக பதியப்பட்டு அதனை ஒட்டி அனைத்துச் செயற்பாடுகளும் நடந்து வந்துள்ளன.
மலையக மக்களின் 200 வருட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் ஏராளம். காணி உரிமை, கல்வி உரிமை, வீட்டு உரிமை, உழைப்புக்கேற்ற ஊதியம் என அனைத்தும் மறுக்கப்பட்ட வலியோடு வாழும் அவர்களிடம் தற்போது அவற்றை அடைந்தே தீருவது என்ற உத்வேகம் எழத் தொடங்கி இருக்கிறது.
தலை நிமிர்ந்து நிற்கும் உரிமையும் தகுதியும் இந்த இனத்திற்கு நிச்சயம் உண்டு. முல்லோயா கோவிந்தன் தொடங்கி பல போராளிகளை உரிமைக்காக பலி கொடுத்த வரலாற்றை உடைய மலையக மக்கள் வலி நீங்கி வாழப் போராடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். உரிமைகள் உள்ள வாழ்விற்காக காத்திருக்கிறார்கள்.